கொல்கத்தாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ ஒன்றை நேற்று சிசிடிவி மூலம் கண்காணித்த கட்சிகளின் தொண்டர்கள். படம்: பிடிஐ
கொல்கத்தா: தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பால்டா தொகுதியில் 32, டைமண்ட் ஹார்பரில் 29, மகரஹட்டில் 13 மற்றும் பஜ் பஜ் தொகுதியில் 3 என மொத்தம் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிக்கைகள் வந்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு, இயந்திரங்கள் மீது திரவங்களை ஊற்றுதல், கண்காணிப்பு கேமராக்களை மறைத்தல் போன்ற புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள மகரஹட் பாஸ்சிம் தொகுதியில், வாக்காளர்களின் சட்டைப் பைகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முயன்றதாகப் பதிவாகியுள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவின் பேரில், சிறப்புப் பார்வையாளர் சுப்ரதா குப்தா சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் நேரடி ஆய்வை மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக மறுநாளே நடத்தப்படும் ஆய்வுகளைத் தாண்டி, இம்முறை கள நிலவரத்தைத் துல்லியமாக அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், மறுவாக்குப் பதிவு குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும். தேவைப்பட்டால், இன்று வெள்ளிக்கிழமையே (மே 1) மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.