நாக்பூர்: சொந்த கட்சிக்குள்ளேயே (சிவசேனா) ஆட்சி மாற்றத்தை உத்தவ் தாக்கரேவால் தடுக்க முடியவில்லை. அவர் ஆட்சி மாற்றம் குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறும்போது, “ஓர் அரசு மக்களின் உரிமைகளைப் பறித்தால் அந்த அரசை மாற்ற வேண்டியது கட்டாயம்” என்றார்.
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வு்ர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரில் நேற்று கூறியதாவது: சொந்த கட்சிக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தை உத்தவ் தாக்கரேவால் தடுக்க முடியவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் குறித்து அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பால் தாக்கரேவின் இந்துத்துவா கொள்கையை உத்தவ் கைவிட்டு விட்டார். இதன் காரணமாகவே சிவசேனாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். போராட்டங்களின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். நேபாளம், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானைப் போன்று இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர்.
அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு பட்னாவிஸ் தெரிவித்தார். கடந்த 2022-ல் சிவசேனா கட்சி உடைந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி உதயமானது. அதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறைமுகமாக சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.