பாட்னா: பிஹாரில் ரூ.34,470 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக கங்கை நதியில் ரூ.4,280 கோடியில் கட்டப்பட்ட நிதிஷ் பாலத்தையும் அவர் திறந்துவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற விழாவில் ரூ.34,470 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக பாட்னா மாவட்டத்தின் கச்சி தர்காவையும் வைஷாலி மாவட்டத்தின் பிடிபூரையும் இணைக்கும் வகையில் கங்கை நதியில் ரூ.4,280 கோடி செலவில் 19.7 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட தொங்கு பாலத்தை அவர் திறந்துவைத்தார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 26,900 வீடுகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் பிஹாரில் நல்லாட்சிக்கு வித்திட்டார். அவரது முயற்சியால் கங்கை நதியில் புதிய ஆற்றுப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள். நிதிஷ் குமாரின் மக்கள் நலச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் புதிய பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் பிஹார் என்றாலே ஊழல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். இப்போது பிஹார் என்றால் வளர்ச்சி திட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த மாநிலத்தில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
மத்தியிலும், பிஹாரிலும் ஆட்சி நடத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. வளமான, வலுவான, சுயசார்புடைய பிஹாரை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஓய்வின்றி உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பட்டமளிப்பு விழா
மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறன் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது நாடு முழுவதும் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள், பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த 52 பேருக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.