புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், சிஜேபி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எதிர்க்கட்சியினர் ஆட்சியை மாற்ற விரும்புகிறார்கள் என்று மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. தேர்தல்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவே நாங்கள் தற்போது போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இத்தகைய கொடூரங்கள் தொடருமானால், நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆமாம்... நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "போராட்டக் குழுவினர், நாட்டின் இளைஞர்களைக் குழப்ப அரசியலில் பகடைக்காய்களாக மாற்ற முயன்றுள்ளனர். வங்கதேசத்தில் நிகழ்ந்தது போன் றதொரு அரசு மாற்றத்தை அரங்கேற்றுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
உண்மையில், அவர்களில் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில், இந்த ஆட்சி மாற்றத்துக்குத் தாங்கள் வங்கதேசத்திலிருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்தார்.
மற்றொருவரோ, மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று துணிச்சலாக அழைப்பு விடுத்தார். இது அவர்களின் ஒரே நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஜனநாயகம் என் பது குழப்பத்தை விதைப்பதற்கான உரிமம் அல்ல. இதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.