புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்றது. அப்போது 489 மக்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்ப கால ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. அடுத்து 1957-ல் நடைபெற்ற 2-வது பொதுத் தேர்தலில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்தது. அதன்பின், 1967-ல் 4-வது பொதுத் தேர்தலின் போது, தொகுதிகளின் எண்ணிக்கை 520 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், 1971 தேர்தலில் 518 என குறைக்கப்பட்டது.
அதன்பின் 1977-ல் இந்த எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. 1980-ல் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 என உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை அந்த எண்ணிக்கை மாறாமல் நீடித்து வருகிறது.
குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை ஊக்குவிக்கவும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையை பேணவும் 1976-ல் தொகுதி மறுவரையறை செய்வது நிறுத்தப்பட்டது. மக்கள் தொகை பெருகினாலும் ‘உறை நிலை’ (பிரீஸ்) என்ற பெயரில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் இந்த உறை நிலை 2001 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை பின்னர் 2026-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இதனால், கடந்த பல தசாப்தங்களாக மக்கள்தொகை கணிசமாகப் பெருகினாலும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் இருக்கிறது. இதற்கிடையில், 1971 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யவில்லை.
தற்போது, 2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், இந்த நடவடிக்கை 6-வது முறையாக இருக்கும்.