இந்தியா

டெல்லி பேரணி: எஸ்ஐஆர் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மனு

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: எஸ்ஐஆர் பணியின்போது வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் 11 தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த மனுவின் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எஸ்ஐஆர் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இண்டியா கூட்டணி தலைவர் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி 'ஜனநாயகத்துக்கான பேரணி' நடத்தியதைத் தொடர்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பொதுநல வழக்கில் 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத், சிபிஎம் தலைவர் எம்.ஏ. பேபி, சிபிஐ தலைவர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மஹுவா மாஜி, என்சிபி (எஸ்சிபி) தலைவர் சுப்ரியா சுலே மற்றும் ஐயுஎம்எல் தலைவர் இ.டி. முகமது பஷீர் ஆகியோர் பெயர்கள் மனுவில் இடம்பெற்றுள்ளன. இந்த மனுவில் உள்ள நான்கு எதிர்மனுதாரர்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இண்டியா கூட்டணியின் தலைவர்கள் முதலில் பரகம்பா சாலை சந்திப்பில் கூடினர். பின்னர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பிற்பகலில் ஊர்வலமாக புறப்பட்டனர். எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், தேசியக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தப் பேரணி பாரகம்பா சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.

இண்டியா கூட்டணித் தலைவர்கள் சென்ற பேருந்து கோப்பர்நிக்கஸ் மார்க்கை (இந்தியா கேட் வட்டப்பாதைக்குச் செல்லும் வழி) நோக்கித் திரும்பியது. போராட்டக்காரர்களைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மறுப்பு

முன்னதாக, வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்துப் பேச, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த சந்திப்பு கோரிக்கையை நிராகரித்தார்.

இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறும்போது, “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் வாக்குக் களவாடல் குறித்துத் தலைமை நீதிபதியிடம் முறையிட அனுமதி கோரினோம். ஆனால், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி எங்களைச் சந்திக்க விரும்பவில்லை.

வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடு மற்றும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து முறையிட நேரம் கேட்டால், அரசியல்வாதிகளைச் சந்திக்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகிறார். தலைமை நீதிபதியின் இந்த முடிவை நாட்டு மக்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்” என்றார்.

காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் பேசுகையில், “நாங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுப்போம். கட்சியின் தலைமை என்ன வழிகாட்டுதல் வழங்குகிறதோ, அதை அனைவரும் பின்பற்றுவார்கள். மக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து போராடும் எழுச்சி நிலவுகிறது” என்றார்.

இதனிடையே, சந்திப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், “சந்திப்பு கோரி ஞாயிற்றுக்கிழமை எனக்குக் கடிதம் வந்தது. எதற்காக இந்தச் சந்திப்பை ஏற்க இயலாது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு அன்றிரவே அவர்களுக்குப் பதில் அனுப்பி விட்டேன்.

நாட்டின் எந்தவொரு சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, அவர்களுக்காகச் சட்டரீதியான வழிகளில் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அனைவரும் நீதிமன்றத்தை அணுக முழு உரிமை உண்டு. அவர்களின் முறையீடுகளை விசாரித்து, சட்டத்துக்கு உட்பட்டு வழங்க வேண்டிய நீதியை நீதிமன்றம் நிச்சயமாக வழங்கும்” என்றார்.

SCROLL FOR NEXT