இந்தியா

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தான் விரும்பும் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஃப்தர்ஜங் மருத்துவமனை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்கு முன்பாக அவரைத் தான் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற விரும்புவதாகவும் அவரின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்தபோது, சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றியது தன்னிச்சையான முடிவு அல்ல, அது ஒரு மருத்துவ ரீதியான முடிவு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. இதனை தொடர்ந்து, அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். லடாக்கில் அவர் 35 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. இதில் அரசின் தலையீடு தேவைப்படவில்லை.

நாங்கள் அவரை மேடான்டா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாற்ற விரும்பினோம். இது ஒரு அடிப்படை உரிமை. 30-40 போலீஸார் மற்றும் நீர்ப்பீச்சு வாகனங்கள் சூழ்ந்திருக்கும் சஃப்தர்ஜங் மருத்துவமனையை நாங்கள் விரும்பவில்லை. சோனமின் ரத்த அழுத்தம் முன்பு சுமார் 110/70 என்ற அளவில் இருந்தது. ஆனால் சப்தர்ஜங் மருத்துவமனையில் போலீஸாரின் நடமாட்டம் காரணமாக அது 125/85 ஆக உயர்ந்துள்ளது.

வாங்சுக் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினால் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்று அஞ்சியே அரசு அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் இல்லாத நிலையில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

முன்பு நாங்கள் தினமும் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணித்து வந்தோம். ஆனால் நாங்கள் இங்கு வந்ததிலிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. உடனடியாகத் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது. அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம்,” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT