டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநகராட்சி லாரிகள் மூலம் நேற்று தண்ணீர் தெளிக்கப்பட்டது. படம்: பிடிஐ

 
இந்தியா

காற்று மாசு மோசம்: நேரில் வரவேண்டாம் - வழக்கறிஞர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதை தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் மற்றும் நேரில் ஆஜராகும் தரப்பினருக்கு டெல்லி உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 0 முதல் 500 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. இது காற்றின் தரக் குறியீடு (Air Quality Index - AQI) எனப்படுகிறது. இதில் AQI அளவு 0-50க்குள் இருந்தால் சுத்தமான காற்று என்றும், 401 புள்ளிகளுக்கு மேல் இருப்பது மிக மோசமான மாசுபாடு கொண்டது என்றும் வரையறுக்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து, காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் 38 நிலையங்களில் நேற்று காற்றின் தரம் கடுமையானதாகவும், 2 நிலையங்களில் மிக மோசமானதாகவும் இருந்தது. ஜஹாங்கீர்புரியில் காற்றின் தரக் குறியீடு (AQI) அதிகபட்சமாக நேற்று காலை 498 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது நேரடி மற்றும் காணொலி என இருமுறைகளிலும் வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளில், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் நேரடியாக ஆஜராகும் தரப்பினர் நீதிமன்றத்துக்கு நேரில் வருவதை தவிர்த்து, காணொலி விசாரணையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் இதே அறிவுறுத்தலை கடந்த 14-ம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT