கோப்புப் படம்
புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டு அவசர நிலை ஏற்பட்டாலும், தயார் நிலையில் அரசு உடனடியாக செயல்பட பாதாளத்தில் (நிலத்துக்கு அடியில்) கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு சிபிஆர்என் (கெமிக்கல், பயாலஜிக்கல், ரோடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர்) கட்டுப்பாட்டு மையம் என பெயர். இதை டெல்லியில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி தீயணைப்புத்துறையின் தலைமை அதிகாரி அபிலாஷ் மாலிக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அவசரநிலை காலத்தில், அணுகதிர் வீச்சு பாதிப்பு ஏற்படும் சூழலில் அரசு முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யவும், இதில் பணியாற்றும் நபர்களை பாதுகாக்கவும் பாதாளத்தில் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்படும். டெல்லியில் சிபிஆர்என் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. இங்கு பணியாற்றும் நபர்கள் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் இந்த கட்டுப்பாட்டு மையம் வடிவமைக்கப்படுகிறது.
டெல்லியில் நேரு ப்ளேஸ், லட்சுமி நகர் மற்றும் ரோஹினி ஆகிய இடங்களில் பேரிடர் மையங்கள் உள்ளன. பேரிடர் காலங்களில் இந்த மையங்களுடன் ஒருங்கிணைந்து சிபிஆர்என் கட்டுப்பாட்டு மையம் செயல்படும். டெல்லி தீயணைப்பு துறை தேடுதல் மற்றும் மீட்பு பணியின் போதும் இந்த மையம் வழிகாட்டும். இந்த நிலத்தடி கட்டுப்பாட்டு மையப் பணிகள் 5 ஆண்டு காலத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அபிலாஷ் மாலிக் கூறினார்.