கோப்புப்படம்

 
இந்தியா

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து இரு இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர்.

தங்கள் கைகளில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்ததில், மஞ்சள் நிற புகை அவை முழுவதும் பரவியது. அப்போது அந்த நபர்கள், சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம் என முழக்கம் எழுப்பினர். இச்சம்பவத்தால் அவையில் இருந்த எம்.பி.க்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதையடுத்து பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிரண் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT