

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் விற்பனை செய்யப்படும் அரவணை பாயசம் உள்ளிட்ட பிரசாதத்தை அஞ்சல் துறை மூலம், பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கே அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் மற்றும் கேரள அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் அமிதாப் சிங் ஆகியோர் கூறியதாவது:
அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அரவணை பாயசம், சபரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரசாதங்களில் ஒன்றாகும். அப்பமும் மற்றொரு முக்கியமான இனிப்புப் பிரசாதமாகும்.
இந்நிலையில், வரவிருக்கும் மண்டல மகரவிளக்கு யாத்திரைக் காலத்தை முன்னிட்டு, சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பிரசாதங்களை அஞ்சல் துறை மூலம் தங்கள் வீடுகளுக்கே அனுப்பும் வசதி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து, சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு பார்சல் முன்பதிவு மையத்தை இந்திய அஞ்சல் துறை அமைத்து வருகிறது.
இதன் மூலம், இந்திய அஞ்சல் துறையின் ஸ்பீட் போஸ்ட் பார்சல் சேவை மூலமாக நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வீடுகளுக்கே பிரசாதங்கள் கொண்டு சேர்க்கப்படும். சபரிமலை கோயில் வளாகத்தில் தேவஸ்வம் போர்டு நடத்தும் அரவணை மற்றும் அப்பம் விற்பனை மையங்களுக்கு அருகிலேயே இந்த சிறப்பு பார்சல் முன்பதிவு மையம் செயல்படும்.
பக்தர்கள் சன்னிதானத்திலேயே பிரசாதங்களை முன்பதிவு செய்து, தங்களது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்குள் பிரசாதம் அவர்களது வீடுகளுக்கு சென்றடையும்.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இந்த முயற்சி உதவும். மேலும், பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது பிரசாதப் பொட்டலங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை பொட்டலங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.