புதுடெல்லி: டெல்லியின் தென்மேற்கே சத்யா நிகேதன் அருகே கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தீயணைப்புத்துறை தரப்பில் கூறும்போது, “கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக மதியம் 1.30 மணி அளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக, 8 தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நிலைமையை ஆராய்ந்த அவர்கள், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தொடங்கினர்.” என தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து டெல்லி போலீஸ் கூறும்போது, “இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எத்தனை பேர் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறித்த துல்லிய தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை மூவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஆர்கே புரத்தில் சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. டிடிஎம்ஏ, என்டிஆர்எப், டெல்லி தீயணைப்புப் படை, டெல்லி போலீஸ், எம்சிடி, கேட்ஸ் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நிலைமை உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கட்டிடத்துக்குள் சிக்கியவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே தற்போது மிக முக்கிய முன்னுரிமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சத்யா நிகேதனில் இதேபோன்ற ஒரு கட்டிடம் கடந்த 2022 ஏப்ரலில் இடிந்து விழுந்தது. அதில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.