

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி
புவனேஷ்வர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 15% பேர் நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
“எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 14 முதல் 15 கோடி பேரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதில் நாட்டின் சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களில் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. எஸ்ஐஆர் பணிக்கான அடிப்படை நோக்கம் அதுதான்.
தேசிய மக்கள் தொகை ஆணையம் செய்ய முடியாத ஒரு பணியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதனால் அப்படி நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏனெனில், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முக்கிய பணியை செய்து உள்ளீர்கள். தேசத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையில் சுமார் 14 முதல் 15 சதவீதம் பேரை நீக்கியுள்ளது பெரிய சாதனை.
இதன் மூலம் ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் டிங்கரிங் செய்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் கருணை தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக இந்தப் பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு முதல் கட்டமாக பிஹாரில் இந்தப் பணி நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்டமாக விடுபட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி தொடங்கியது.
இந்நிலையில், அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 9.78 கோடி வாக்காளர்களில் சுமார் 7.71 கோடி பேர் மட்டுமே வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.