இந்தியா

டெல்லி ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ ராஜேஷ் குப்தா பாஜகவில் ஐக்கியம்!

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், இரண்டு முறை டெல்லி எம்எல்ஏவாக இருந்தவருமான ராஜேஷ் குப்தா கட்சியை விட்டு விலகி இன்று பாஜகவில் இணைந்தார். ஆம் ஆத்மி கட்சி தனது தொண்டர்களை பயன்படுத்தி தூக்கி எறிவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜகவின் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ராஜேஷ் குப்தா இன்று பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ராஜேஷ் குப்தா, “கட்சியை விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி ஆம் ஆத்மி கட்சி இப்போது கவலைப்படுவதில்லை. பலரும் ஆம் ஆத்மியிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், அவர்கள் வெளியேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் மரியாதைக்குரிய ஒரு கட்சிக்கு செல்ல வேண்டும், தங்கள் தொண்டர்களைப் பயன்படுத்தாத மற்றும் தூக்கி எறியாத ஒரு கட்சிக்கு அவர்கள் செல்ல வேண்டும்.

கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பல ஆண்டுகளாக நான் ஆற்றிய கடின உழைப்பையும், சேவைகளையும் மதிக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களே, பலர் உங்களை விட்டு விலகுவதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மத்தியில் நான் உங்களுடன் நின்றேன். நான் எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாத்தேன். சட்டப் பேரவையிலிருந்து தொலைக்காட்சி வரை நான் உங்களுக்காகப் போராடினேன். எனது விசுவாசத்துக்கு இதுதான் விலையா?

பாஜக தனது மிகச் சிறிய தொண்டர்களைக் கூட மதிக்கிறது என்பதற்காக நான் அதில் சேர்ந்தேன். அந்தத் தொண்டர் எதிர்காலத்தில் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ கூட ஆகலாம். எனக்கு கட்சியா அல்லது நாடா என்பதை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் நாட்டைத் தேர்ந்தெடுத்தேன்" என்று அவர் கூறினார்.

டெல்லி மாநகராட்சி எம்சிடியில் காலியாக உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நாளை (நவம்பர் 30) நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT