புதுடெல்லி: ரிஷப் ஷா தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறியிருப்பதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின்போது, பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இருந்தவர்கள் தொழுகை செய்து கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் தாக்குதல் நடத்தாமல் நமது ராணுவம் தாமதப்படுத்தியது. 'கடவுள் ஒருவரே' என்ற அடிப்படையில், வழிபாட்டு நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருந்தது.
ராணுவத்தில் பெண்களை சேர்ப்பது மற்றும் பணியிடத்தில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவது போன்ற விஷயங்களில், எனது மகள்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர். அதிகாரத் தோரணையில் இல்லாமல், மற்றவர்களுடன் இறங்கி வந்து பழக வேண்டும் என்பதை அவர்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.
நான் எப்போதும் வகுப்பில் முதலிடத்தில் இருந்ததில்லை. ஆனால் பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் வகுப்பறைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்குத் தயாராவதிலும் கவனம் செலுத்தினேன்.
தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளில் உள்ள தார்மீகச் சிக்கல்களைக் கையாளுவதற்கு அடிக்கடி பகவத் கீதை மற்றும் பிற மத நூல்களைக் மேற்கோள் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.