புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ட்விஷா சர்மா என்பவரும், கிரேட்டர் நொய்டாவில் தீபிகா நகர் என்பவரும் அண்மையில் அடுத்தடுத்து மரணம்அடைந்த சம்பவங்கள், இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வரும் வரதட்சணைக் கொடுமைகளை எடுத்துக்காட்டின.
இவை ஏதோ தற்செயலாக நடந்த தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, பல ஆண்டுகளாகத் தொடரும் அவலமான பின்னணியின் ஒரு பகுதியே என்றும் அதிகாரப்பூர்வத் தரவுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5,737 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சற்றே சரிவைக் காட்டினாலும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதற்கு இந்த எண்ணிக்கையே போதுமானதாக உள்ளது.
கடந்த பத்தாண்டு காலத் தரவுகளை உற்றுநோக்கினால், வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2015-ம் ஆண்டில் 7,634 ஆக இருந்த மரணங்களின் எண்ணிக்கை, 2024-ல் 5,737 ஆகக் குறைந்துள்ளது.
இந்த பத்தாண்டுகளில் 1,900 மரணங்கள் குறைந்துள்ள நிலை சற்றே ஆறுதல் அளித்தாலும், தற்போதைய புள்ளி விவரங்களின்படி நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு 90 நிமிடத்துக்கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கிறார். இது இந்த சமூக அவலம் இன்னும் வீரியத்துடனேயே நீடிக்கிறது என்பதை இது உணர்த்துவதாக அமைந்து உள்ளது.
வரதட்சணைக் கொடுமை மரணங்களைப் பொருத்துவரையில் நாடு முழுவதும் சீராக இல்லை; மாறாக, குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே மிக அதிக அளவில் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த 2024-ல் 2,038 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த வரதட்சணை மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
இதற்கு அடுத்தபடியாக பீகாரில் 1,078 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 450 மரணங்களும் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் (386), மேற்கு வங்கம் (337) ஆகிய மாநிலங்களும் இந்த வரிசையில் முன்னிலையில் உள்ளன.
குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் இந்த வழக்குகள் அதிகளவில் குவிந்திருப்பது, அங்கு வரதட்சணைக் கொடுமை என்பது இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காட்டுகிறது.
வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் மரணங்களில், மன உளைச்சல் மற்றும் சித்திரவதை காரணமாக நிகழும் தற்கொலைகளும், பிற சந்தேகத்திற்குரிய மர ணங்களும் அடங்கும்.
அதே வேளையில், வரதட்சணைப் கொலைகள் எனப்படும் நேரடி வன்முறை மரணங்களையும் தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகள் அப்பட்டமாக்கியுள்ளன. அதன்படி, 2024-ல் மேற்கு வங்கத்தில் 163 படுகொலைகளும், ஒடிசாவில் 161 படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன.
ராஜஸ்தானில் 75, பீகாரில் 66 மற்றும் உத்தர பிரதேசத்தில் 58 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வரதட்சணைத் தகராறுகள் எவ்வாறு ஒரு பெண்ணின் நேரடிப் படுகொலையில் முடிகின்றன என்பதற்கு இந்த எண்களே சாட்சியாக உள்ளன.