காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் நீர்மின்சார திட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டம், சமர்துங் பகுதியில் தேசிய நீர்மின்சக்தி கழகம் (என்எச்பிசி) சார்பில் தீஸ்தா நதி மீது 34.5 மீட்டர் உயர அணையுடன் கூடிய மின்னுற்பத்தி நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணியை படேல் இன்ஜினீயரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் மீத்தேன் வாயுக் கசிவால் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதிகாரிகள் உட்பட 25 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பல்வேறு அமைப்புகள் சார்பில் அங்கு மீட்புப் பணி தொடங்கியது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனம் டி.பூட்டியா நேற்று கூறுகையில், “சுரங்கத்துக்குள் சிக்கிய 25 பேரில் 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 7 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுரங்கத்துக்குள் சிக்கிய எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி தொடர்கிறது. மீட்புப் பணிக்கு உதவிட அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து சிறப்பு சுரங்க மீட்புக் குழு வந்துள்ளது” என்றார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி சூழ்நிலையை கேட்டறிந்தார். அப்போது மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மாநில அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் தமாங் அறிவித்துள்ளார்.