கொச்சி: கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 26 ஆண்டுகளாக ‘ ஸ்ரீ கிருஷ்ணா டீ ஸ்டால்’ என்ற பெயரில் தேநீர், தோசை, ஆம்லெட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்து வந்தவர் ஜெயபாலகிருஷ்ணன்.
கடந்த அக்டோபர் மாதம் 17 வயது சிறுவன் அதிவேகத்தில் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியதில் ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இதையடுத்து அந்த சிறுவன், அவனது தந்தையான கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஹைதராபாத்தில் உணவுப் பொருள்களின் தர ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயபாலகிருஷ்ணனின் மகள் பத்ரா கீர்த்தி, குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சமாளிப்பதற்காக தந்தையின் ஓட்டலை மீண்டும் திறந்து நடத்தி வருகிறார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “தற்போது எங்கள் குடும்பத்துக்கு இந்தக் கடை மட்டுமே முக்கிய வருமானமாக உள்ளது.
எனது சம்பளத்தை மட்டும் வைத்து குடும்பத்தின் மாதாந்திர செலவுகளைச் சமாளிக்க முடியாது. மேலும், இந்த 26 ஆண்டுகாலக் கடையுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. இந்தக் கடையை மூடிவிட முடியாது. நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நீதிக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவோம்” என்றார்.