கோப்புப் படம்
அனந்தபூர்: கோயிலுக்குச் செல்பவர்கள் நல்ல கல்வி வேண்டும், வேலை வேண்டும், நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், பணக்காரர் ஆக வேண்டும் என்று பலவிதமாக கடவுளிடம் வேண்டிக் கொள்வது வழக்கம்.
ஆனால், ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார். இங்குள்ள ஒரு முருகன் கோயிலில் சமீபத்தில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
அப்போது ஒரு புறத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த ரூ.20 நோட்டு அவர்கள் கையில் கிடைத்தது. அதில், ‘‘மாமியார் இம்சை தாங்க முடியவில்லை. அவர் விரைவில் இறக்க வேண்டும் கடவுளே..’’ என்று எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட கோயில் நிர்வாகிகள் சிரித்து மகிழ்ந்தனர்.
யாரோ ஒரு மருமகள் தனது மாமியார் செய்யும் கொடுமையை நிரந்தரமாக ‘தீர்த்து’ வைக்க சுவாமிக்குக் காணிக்கை கொடுத்துள்ளார் என பேசிக் கொண்டனர். இந்த விசித்திர சம்பவம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.