

பெங்களூரு: மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு அதிக நன்மை ஏற்படும் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டு அணை திட்டத்தால் பெங்களூருவின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தியாகும்.
அதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்து பெங்களூருவுக்கு பயன்படுத்துவோம். விவசாய தேவைக்கு கர்நாடக அரசு அந்த நீரை பயன்படுத்தாது. அதேவேளையில் அந்த திட்டத்தின் வாயிலாக கர்நாடகாவை விட தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். தற்போது உபரி நீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாகக்கலக்க விடுகிறோம்.
வறட்சி காலங்களில் நீர் இல்லாமல் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. வறட்சி காலங்களில் நீரை அங்கு தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு எளிதாக நீரை திறந்துவிட முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்.
ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய நீரில் குறைந்த அளவுக்கே நீரை திறந்து விட்டிருக்கிறோம். கர்நாடக அணைகளில் குடிநீர் தேவையைத் தவிர்த்து 3 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
எனவே ஜூன் மாதம் 3-வது வாரத்தில் திறக்க வேண்டிய நீரை திறப்பதில் சிரமம் உள்ளது. மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இருப்பினும் சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. அதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
அதேவேளையில் இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.