நிதின் ராஜ்
கண்ணூர்: கேரளாவின் திருவனந்தபுரம் அருகேயுள்ள உழாமலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் ராஜ். இவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் பட்டப்படிப்பு சுயநிதிப் பிரிவில் கடந்தாண்டு சேர்ந்தார். இவர் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்.
ஆன்லைன் செயலி மூலம் நிதின் ராஜ் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் நிறுவன ஏஜென்ட்டுகள் நிதின் ராஜை போனில் மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் கல்லூரி பேராசிரியர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நிதின் ராஜ் கடந்த வெள்ளிக் கிழமை கல்லூரி கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நிதின் ராஜ் இறப்பதற்கு முன் வெளியிட்ட ஆடியோ ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியானது.
அதில் நிதின் ராஜ் கூறியிருப்பதாவது: ஒரு பேராசிரியர் என்னை வெளிப்படையாக அவமானப்படுத்தினார். இதனால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். தேர்வில் நான் எழுத்துப் பிழையுடன் எழுதியிருந்த விடைத்தாளை அவர் மற்ற மாணவர்களிடம் காட்டினார். அவர் என்னை முட்டாள் என அழைத்தார். நான் ‘சேம் டு யு’ என பதில் அளித்தேன். கை, கால்களை வெட்டுவேன் என மிரட்டினார். முடிந்தால் செய்யுங்கள் என பதில் கூறினேன். இவ்வாறு நிதின் ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து துறைத் தலைவர் மற்றும் ஒரு பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நிதின் ராஜ் இறப்பு தொடர்பாக இயற்கைக்கு முரணான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், 2 பேராசிரியர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.