

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சம்பள உயர்வு கேட்டு நேற்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார். படம்: பிடிஐ
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிலாளர் நடத்தி வந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நொய்டாவில் பேஸ் 2, செக்டார் 60, செக்டார் 62, செக்டார் 84 உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.
நேற்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் போராட்டக்கார்களில் ஒரு பிரிவினர் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் 57 செக்டாரில் சுமார் 50 நிறுவனங்கள் மற்றும் 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு நிறுவனத்துக்கு தீவைக்கும் முயற்சியிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.
இதுபோல் 58-வது மற்றும் 59—வது செக்டார் பகுதிகளிலும் தொழிற்சாலைக்குள் புகுந்து சேதப்படுத்துதல், கற்களை வீசுதல் வாகனங்களை சேதப்படுத்துதல் மற்றும் தீ வைத்தல் என வன்முறையில் ஈடுபட்டனர். செக்டார் 62-ஐ செக்டார் 16 மற்றும் என்எச் 9 உடன் இணைக்கும் முக்கியச் சாலைகளில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நொய்டாவின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அலுவலகம் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையில் வன்முறை பரவிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
100 பேர் கைது: தொழிலாளர் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை காவல்துறை அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா எச்சரித்தார். இந்நிலையில் வன்முறை தொடர்பாக சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கவுதம புத்த நகர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தொழில்துறைத் துறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும், மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். ஊழியர்களின் ஊதியம், கூடுதல்நேர பணிக்கான ஊதியம், போனஸ் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகளைச் சீரமைப்பதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.