புதுடெல்லி: இந்திய ராணுவப் படைகளுக்காக ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பில் இலகுரக பல்நோக்கு ஹெலிகாப்டர்கள், நீண்ட தூர காமிகேஸ் ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மொத்தம் ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய ராணுவத்துக்காக அதிக சுமை மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் இயங்கக்கூடிய வாகனங்கள், சுயமாக இயங்கும் டிராக் வகை பீரங்கி அமைப்பு, இலகுரக பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் (எல்எம்ஆர்எச்), மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா வான்வழி வாகனங்களை எதிர்கொள்ளும் அமைப்பு (சி-யுஏஎஸ்), பிற ஆளில்லா வான்வழி அமைப்புகள், கண்காணிப்பு ட்ரோன்கள், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் தாக்குதல் அமைப்பு, நீண்ட தூர காமிகேஸ் ட்ரோன் அமைப்பு, பருவநிலையை கண்டறிய உதவும் ரேடார்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காமிகேஸ் ட்ரோன்கள் என்பது இலக்கை நோக்கிப் பறந்து, அதன் மீது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா வான்வழி ஆயுதங்களாகும்.
கடற்படைக்கும் தளவாடங்கள் இந்தியக் கடற்படைக்காக, கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் எதிரி ஏவுகணைகளைத் திசைத் திருப்பும் செயலில் இயங்கும் அமைப்பு (ஆக்டிவ் ஆஃப்போர்டு டிகாய் சிஸ்டம்) உள்ளிட்ட முக்கிய கடற்படைத் தளவாடங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படைக்காக ஹெலிகாப்டர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மொபைல் எக்ஸ்-பேண்ட் பருவநிலை ரேடார்கள், வான்வழியாக பொருட்களை கொண்டு செல்ல உதவும் வகையில் சிறப்பு பயன்பாடு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யவும் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கொள்முதல் திட்டங்களுக்கான ஒப்புதல்களில், சுமார் 82 சதவீதத் தளவாடங்கள் இந்திய உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.