அமராவதி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசாபூர் நகருக்கு அருகே மற்றும் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையேயான கடல்பகுதியில் புயலின் மையப்பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
புயல் கரையை கடக்கும் இந்த முழுமையான செயல்முறை அடுத்த சில மணி நேரங்களுக்குத் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயலின் மையப்பகுதியில் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.
கடந்த மூன்று மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த இந்தப் புயல், தொடர்ந்து மெதுவாக வடமேற்கு மற்றும் வட-வடமேற்கு திசையில் நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குறிப்பாக அனகாபள்ளி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் 200 மி.மீ-க்கும் அதிகமான அதிகனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் வேளையில், வழக்கமான கடல் அலைகளின் உயரத்தை விட 1.5 முதல் 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் சீறிப்பாய்ந்து எழக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காக்கிநாடா மற்றும் ஏனாம் பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் சரிந்தும் போக்குவரத்து, மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக புயல் காரணமாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புயல் நிலவரம் மற்றும் சேதங்கள் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்குமாறும், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் முழுமையாக கரையை கடக்கும் வரை கனமழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று தொடரும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சுமார் 85 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.