புதுடெல்லி: சர்வதேச அளவிலான சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடுகள், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நிதி சேவை சார்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டுமுதல் தொலைத்தொடர்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 10-வது தொலைத்தொடர்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெறுகிறது. மாநாடு மற்றும் கண்காட்சியில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 500 நிறுவனங்கள், 600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 100 நாடுகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிபுணர்கள் பங்கேற்று உள்ளனர்.
டெல்லியில் நேற்று தொலைத்தொடர்பு மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது: ஸ்மார்ட் மொபைல் போன்களால் மக்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் மொபைல்போன்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் மொபைல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது. ஆனால் இந்தியாவில் மொபைல்போன், இணையசேவை காரணமாக கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வழக்கம்போல இயங்கின.
கடந்த கால ஆட்சிகளில் அரசு நலத்திட்டங்களில் சுமார் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை இடைத்தரகர்கள் அபகரித்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் இந்த மோசடியை தடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் குற்றவாளி பல்வேறு நாடுகளில் சைபர் மோசடிகளில் ஈடுபடுகிறார். இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் டீப்ஃபேக் புகைப்படங்கள், வீடியோக்கள் மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்து உள்ளன. சர்வதேச சைபர் குற்றங்களை தடுக்கவும், டீப்ஃபேக் சவால்களை எதிர்கொள்ளவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.