புதுடெல்லி: முசாபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013ல் நடந்த கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 40,000 பேர் அந்நகரை விட்டு இடம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தில் 2013, செப்டம்பர் 8ம் தேதி முகமது பூர் ரைசிங் கிராமத்திலும் வன்முறை ஏற்பட்டது.
இது தொடர்பான கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு வழக்கில் 26 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. முசாபர் நகரின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை காலத்தில் 4 பேர் இறந்ததால் 22 பேர் வழக்கை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி எஸ்ஐடி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி 22 பேரையும் நீதிபதி கனிஷ்க் குமார் விடுதலை செய்தார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் நரேந்திர சர்மா கூறுகையில், “ஹனீஃப் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை எஸ்ஐடி பதிவு செய்து விசாரணை செய்தது. அதில் கிராமத்தில் உள்ள வீடுகளை கலவரக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் தாக்கியதாக கூறப்பட்டது. அவர்களின் சொத்துகளை கொள்ளையடித்து, வீடுகளுக்கும் தீ வைத்ததாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
தாக்குதலில் புகார்தாரரின் தந்தை ரஹீஷுதீன் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கலவரக்காரர்கள் ஒரு மசூதியை சேதப்படுத்தியதாகவும், ஒரு காவலருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் சாட்சியங்கள் குறைபாடு காரணமாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர்” என்றார்.
விடுவிக்கப்பட்ட அனைவரும் முகமது பூர் ரைசிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனில், சுபாஷ், சஞ்சீவ், கரண், ஷேர் சிங், ரிஷிபால், ஹன்சர்பால், பிரமோத், விக்கி, பாதல், மதன், ஜெய நாராயண், பிரிஜ்வீர், வினோத், கலா, பர்வீன், ஜக்பால், பிரேம்பால், பப்பு, நீது, பூரா, ஹரேந்தர் சிங் ஆகியோர் ஆவர்.