கொல்கத்தா: தேர்தலின்போது மேற்கு வங்கத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சமிக் பட்டாச்சார்யா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாதுகாப்பு பலமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெறவேண்டும். இதற்காக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தேவையான உத்தரவுகளை கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், நீதிபதி பார்த்தசாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: தேர்தல் தேதிகளின்போது மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவேண்டும். வாக்குச்சாவடிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும்.
அதே நேரத்தில் வாக்குச்சாவடிகளில் மத்திய போலீஸாரை நிறுத்தவேண்டுமா அல்லது மாநில போலீஸாரை நிறுத்தவேண்டுமா என்று கூறும் அதிகாரம், மனுதாரருக்கு இல்லை. இதற்கான முடிவுகளை தேர்தல் ஆணையமே எடுக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.