ரஷ்மி துபே, ஷ்ரத்தா துபே மற்றும் தன்வீர் அலி.
மும்பை: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28) கடந்த அக்டோபர் 9 அன்று ஒரு குடியிருப்பு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, மாடல் அழகியும் சோஷியல் மீடியா பிரபலமுமான ஷ்ரத்தா துபே (31), அவரது சகோதரி ரஷ்மி துபே மற்றும் அவர்களின் ஓட்டுநர் தன்வீர் அலி (எ) டேனிஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் கான்பூர், ஆக்ரா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களுக்கு தப்பிச் சென்று இறுதியாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் வந்தடைந்துள்ளனர். உத்தர பிரதேச காவல் துறையினர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நாக்பூர் குற்றப்பிரிவு காவல்துறை இந்த மூவரையும் கைது செய்தனர்.
நாக்பூர் குற்றப்பிரிவு மூத்த காவல் ஆய்வாளர் சுபாங்கி தேஷ்முக் தலைமையிலான குழு மற்றும் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மூவரையும் முதன்மை நீதித்துறை நடுவர் சமீர் சத்தாராம் காமத் முன்னிலையில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை உ.பி. அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஷ்ரத்தாவும் உணவக உரிமையாளர் சிவா சர்மாவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த நிலையில், அவர்களது குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது முதலில் விபத்து என கருதப்பட்ட நிலையில், சிவா சர்மாவின் தாய் கொடுத்த புகாரையடுத்து அக்டோபர் 10-ல் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ஆனால், சிவா சர்மாவின் மரணத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், நிதி நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் ஷ்ரத்தா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், சிவா சர்மா கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கூறியதாகவும் ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.