ஆந்திரா: “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவின் தலைநகராக மாவிகுனை உருவாக்குவோம். அமராவதி பெயரில் நடைபெறும் ஊழலை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்” என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
தாடேபள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இப்போதும் மச்சிலிப்பட்டினம் - விஜயவாடா - குண்டூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் பகுதிகளை இணைத்து உருவாக்கும் 'மாவிகுன்' (MAVIGUN) தலைநகரம் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவே அடுத்த தேர்தலில் எங்கள் முக்கிய முழக்கமாக இருக்கும். மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அமராவதி பெயரில் நடைபெறும் ஊழலை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதற்கு 'மாவிகுன்' தான் தகுந்த பதிலாகும். இயற்கையான சாதகமான அம்சங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட 'மாவிகுன்' திட்டம் அதற்குச் சரியான தீர்வாக அமையும்.
தலித் கிறிஸ்தவர் விவகாரத்தில் ஒருவர் வேறொரு மதத்துக்கு மாறுவதால் அவரது சமூக அந்தஸ்து மாறிவிடாது. இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம்.
முன்னதாக, சட்டப்பேரவையில் இது குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளோம். தனது கட்சித் தலைவர்கள் வெறுப்புணர்வைப் பரப்பி மத உணர்வுகளைத் தூண்டும்போதும் சந்திரபாபு மவுனம் காத்து வருகிறார். தலித் கிறிஸ்தவர் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஆந்திராவில் காவல் துறையை சந்திரபாபு நாயுடு அரசியல் மயமாக்குகிறார். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக மாற்றும் புதிய போக்கை அவர் உருவாக்கியுள்ளார். அமராவதியில் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களையும், அங்கு நடக்கும் ஊழல் மற்றும் ஆடம்பரங்களையும் நேரில் காண்பதற்காக, விவசாயிகளின் அழைப்பின் பேரில் எங்கள் குழு பெனுமக்காவுக்குச் சென்றது. ஆனால், அரசைக் கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி, அவர்களைச் சிறைக்கு அனுப்பித் துன்புறுத்துகிறார்கள். இங்கு ஒரு காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது. ஆனாலும், நாங்கள் அவர்களுக்குத் துணை நின்று போராடுவோம்” என்றார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், 2014ல் தனியாக பிரிந்தபின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனையடுத்து சந்திரபாபுநாயுடு ஆட்சியின்போது, அமராவதியை தலைநகராக உருவாக்குவதாக அறிவித்தார். ஆனால், 2019-ல் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த பின்னர் அமராவதியை தலைநகராக்கும் முடிவை கிடப்பில் போட்டார். மீண்டும் 2024-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், அமராவதியை தலைநகராக்கினார். இப்போது மீண்டும் ஆந்திராவில் தலைநகர் விளையாட்டை ஜெகன் தொடங்கியுள்ளார்.