புதுடெல்லி: மகாத்மா ஜோதிபா புலேயின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் நடைபெற்றது. இதில் பங்கேற்கப் பிரதமர் மோடி காரில் வந்து இறங்கினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். அப்போது பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் சிறிது நேரம் சுமுகமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
இருவரும் பொது மேடைகளிலும் அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வரும் நிலையில் இந்த உரையால் நிகழ்ந்தது. நாட்டு நலனுடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி கடந்த காலங்களில் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த விமர்சனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த காலங்களில் வலுவான பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தியை ராஜகுமாரன் என்று அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இந்நிலையில் இருவரும் வெளிப்படையாக பேசிக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரேர்னா ஸ்தலில் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சமூக நீதி மற்றும் கல்விக்குப் புலே ஆற்றிய பங்களிப்பை பாராட்டியதுடன், அறிவாற்றல் மற்றும் சீர்திருத்தத்தின் மூலம் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளித்த ஒரு முன்னோடி என்று அவரை புகழ்ந்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்' பதிவில், பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் புலே மேற்கொண்ட போராட்டத்தை எடுத்துரைத்தார். சமூக நீதியை நோக்கிய பாதையில் அவரது லட்சியங்கள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று அவர் புகழாரம் சூட்டினார்.