புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ நூல் வெளியானதிலிருந்தே, அதில் உள்ள தகவல் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் கலவரம் குறித்து அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து அந்த நூலில், ‘சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அயோத்தியிலிருந்து அகமதாபாத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. இந்து கரசேவகர்கள் பயணம் செய்த அந்த ரயிலின் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் 9 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் சர்ச்சை நீடிக்கிறது’ என்று எழுதியுள்ளார்.
இந்நிலையில், ரயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவர் ராகேஷ் அஸ்தானா கூறும்போது, “விசாரணை முழுமையாக முடிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தீ, எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டே வைக்கப்பட்டது. எனவே, தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற கூற்றை நான் ஏற்கவில்லை. மேலும், குறிப்பாக எஸ்6 பெட்டி மட்டுமே குறிவைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணத்தைப் பொறுத்தவரை, இந்த வழக்கு முதன்மையாக தடயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. இது சாட்சிகளின் வாக்குமூலங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எரிந்த ரயில் பெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனை, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தன” எனக் கூறியுள்ளார்.
விசாரணையின்போது, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியிடமிருந்து ஏதேனும் அரசியல் அழுத்தம் இருந்ததா? என்று ராகேஷ் அஸ்தானாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா கூறும்போது, ‘எந்தவிதமான அழுத்தமும் இல்லை. ரயில் பெட்டி தீப்பிடித்த பகுதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். இந்த விசாரணையில் பல முஸ்லிம் அதிகாரிகள் முக்கிய பங்காற்றினர். அனைத்து அதிகாரிகளும் எவ்வித ஆட்சேபனையுமின்றி என்னுடன் பணியாற்றினர்’ எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “மத்தியில் 2004-ல் ஆட்சி மாறியது. அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சபர்மதி ரயில் தீ விபத்து குறித்து ஒரு விசாரணைக் குழு அமைத்தார். நீதிபதி யு.சி. பானர்ஜி தலைமையிலான அக்குழுவின் அறிக்கை, இந்த சம்பவம் ஒரு விபத்தினால் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டது. கரசேவகர்கள் தங்களுடன் அடுப்புகளை எடுத்துச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இருப்பினும், 2005-2006 காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இந்த விசாரணை அறிக்கையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கை தவறானது என்று கூறி உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
உண்மை என்னவென்றால், இந்தத் தீ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. அதற்கான காரணமும் கண்டறியப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையிலும் இதே உண்மை கண்டறியப்பட்டது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது” என தெரிவித்துள்ளனர்.