

கோப்புப்படம்
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். அங்கு மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு மைசூருவுக்கு இந்திய விமான படைக்குச் சொந்தமான சாப்பர் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு படை வீரர்களும் சென்றனர். மூன்று ஹெலிகாப்டர்களும் மைசூரு லலிதா மஹாலில் உள்ள ஜெயசாமராஜ உடையார் ஹெலிபேட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்து 3 ஹெலிகாப்டர்களும் பெங்களூருவுக்கு புறப்பட்டபோது, பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதர 2 ஹெலிகாப்டர்களும் பெங்களூரு விமானப்படை தளத்துக்கு திரும்பின. ஹெலிகாப்டரில் பழுது நீக்கப்பட்ட பின்னர் நேற்று காலை 10 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் மைசூருவிலிருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் அலுவலக அதிகாரிகளின் உத்தரவின்பேரில் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், விமானப் படை ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.