ஹைதராபாத்: கள்ள வாக்குகள் மூலம் தேர்தலைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி விரும்புவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக ‘ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரில் பாஜக நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பேரணியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டார். ஹைதராபாத்தின் பல்வேறு சாலைகள் வழியாக இந்த பேரணி சென்றது. தேசிய கொடியையும் பாஜக கொடியையும் கைகளில் ஏந்தியவாறு இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “காங்கிரஸ் கட்சி கள்ள வாக்குகள் மூலம் தேர்தலை கைப்பற்ற விரும்புகிறது. ஒரு நபருக்கு இரண்டு வாக்குகள் இருந்தால், அதில் ஒன்றை நீக்க வேண்டாமா? மூன்று கோடி வாக்குகள் அப்படிப்பட்டவை.
ராகுல் காந்தி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கட்டும். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய ஒவ்வொரு நபரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை நாங்கள் உறுதி செய்வோம்.
நாங்கள் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணமாகவே வெற்றி பெற்றதாக ராகுல் காந்தி கூறுகிறார். நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன், 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது எஸ்ஐஆர் இல்லையே, அப்படியானால் அவர் எஸ்ஐஆர் காரணமாகவா வெற்றி பெற்றார்? அவர் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றார்.
2019-ம் ஆண்டிலும் மோடி வெற்றி பெற்றார். அப்போதும் எஸ்ஐஆர் இல்லை. அப்போதும் இந்திய வாக்காளர்களின் ஆதரவால்தான் அவர் வெற்றி பெற்றார். 2024-க்குப் பிறகு மகாராஷ்டிராவில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். ஹரியானாவிலும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லிலும் வெற்றி பெற்றோம்.
பிஹாரிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஒட்டுமொத்த அரசியல் செல்வாக்கும் அழிந்துவிட்டது. 2024க்குப் பிறகு மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, பிஹார், மேற்கு வங்கம், அசாமில் வெற்றி பெற்ற நாங்கள் இப்போது தெலங்கானாவிலும் வெற்றி பெற தயாராகிவிட்டோம்.
ராகுல் காந்தியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஏனெனில், அவர் மூன்று அல்லது நான்கு மாதங்கள்தான் நாட்டில் இருக்கிறார். பிறகு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறார். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், இந்த நாட்டில் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுடன் இணைந்து நின்று, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பாடுபட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்புகள் நாடாளுமன்றத்தின் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தைச் செயல்பட விடுவதில்லை. நான் அவருக்குச் சவால் விடுகிறேன். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட நாங்கள் தயார். விவாதத்தில் பங்கேற்க நீங்கள் தயாரா?
ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்க மாட்டார். ஏனென்றால், குழப்பம், ஒழுங்கின்மை மூலமாகவே மட்டுமே காங்கிரஸ் கட்சியால் செய்திகளில் இடம்பிடிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். நாடாளுமன்றம் முறையாகச் செயல்பட்டால், அவர்களின் வாதங்களை பிரதமர் மோடி முழுமையாக தகர்த்துவிடுவார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். அப்படியானால், உங்கள் கட்சியின் ரேவந்த் ரெட்டி எப்படி முதல்வரானார்? கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் உங்கள் கட்சி எப்படி ஆட்சிக்கு வந்தது? வாக்குப்பதிவு இயந்திரங்கள் அவ்வளவு மோசமானவை என்றால், நீங்கள் ஏன் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள்?
நீங்கள் வெற்றி பெறும்போது பெருமை மக்களைச் சேருகிறது. ஆனால், தோல்வியடையும்போது மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். காங்கிரஸ் கட்சி தற்போது வென்டிலேட்டரில் உள்ளது. இந்த நிலையில் இருக்கும் கட்சியால், மோடியுடன் இணைந்து எப்படி மாரத்தான் ஓட முடியும்?” என தெரிவித்தார்.