குவாஹாட்டி: அசாமில் இருந்து 5 யானைகள் அண்மையில் தமிழகக் கோயில்களுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால் மற்றும் சிவா, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி யானைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் கூறியிருப்பதாவது: அசாமில் இருந்து 5 யானைகள் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்தது தொடர்பாக வனவிலங்கு ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஐந்து யானைகளும் நன்கொடையாக வழங்கப்பட்டதா? விலை கொடுத்து வாங்கப்பட்டதா? பணப் பரிமாற்றம் நடைபெற்றது என்றால் எவ்வளவு தொகை கைமாறியது் என்பது குறித்து அரசு விளக்க வேண்டும்.
தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ஜாய்மாலா யானை விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன்பிறகும் 5 யானைகள் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஐந்து யானைகளையும் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.