கோப்புப் படம்

 
இந்தியா

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்துக்கு எதிராக புதன்கிழமை காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: ‘100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் பெயரை விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ என மத்திய அரசு மாற்றுவதைக் கண்டித்து புதன்கிழமை (டிச.17) நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்களுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம், பாஜக அரசாங்கம் ஓர் அபாயகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சட்டமியற்றும் நடவடிக்கை அல்ல.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, உரிமை அடிப்படையிலான மக்கள் சட்டத்தை பலவீனப்படுத்தவும் இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நலத்திட்டச் சட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரையும், அவரது விழுமியங்களையும் அழித்தொழிக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நகர்வு ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தின் விளைவாகப் பிறந்தது. ‘ஒவ்வொரு கைக்கும் வேலை கொடுங்கள்; வேலைக்கு முழு ஊதியம் கொடுங்கள்’ என்ற வாக்குறுதியை அது கொண்டிருந்தது. இது கிராமப்புற இந்தியர்களுக்கு வேலை கோருவதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதி செய்தது.

கிராமப்புற இந்தியா முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்தது. பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தை இது வலுப்படுத்தியது. பெண்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இது அதிகாரம் அளித்தது.

காந்தியடிகளின் மரபு, தொழிலாளர்களின் உரிமை, கூட்டாட்சிப் பொறுப்பு ஆகியவற்றின் மீதான பாஜக அரசாங்கத்தின் இந்த ஒருங்கிணந்த தாக்குதல், பாஜக -ஆர்எஸ்எஸ் சதியை அம்பலப்படுத்துகிறது.

இந்த தாக்குதலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (டிச.17, 2025) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் மகாத்மா காந்தியின் உருவப்படங்களுடன் நடத்தப்பட வேண்டும். இது அவரது பெயரையும் விழுமியங்களையும் அழிப்பதற்கு எதிரான எதிர்ப்பை இது குறிக்கும். இந்த புதிய சட்டம் கோடிக்கணக்கான பயனாளிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த போராட்டங்கள் எடுத்துரைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், ‘‘காங்கிரஸ் நிறுவன தினமான டிச.28 அன்று, அனைத்து மண்டலங்களிலும் கிராமங்களிலும் மகாத்மா காந்தியின் உருவப்படங்களுடன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, உழைப்பின் மாண்பு, சமூக நீதி, வேலை செய்வதற்கான உரிமை ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இது ஓர் அரசியல் மற்றும் தார்மீகப் போராட்டமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம், காந்தியடிகளின் மரபு மற்றும் ஏழைகளின் நீதிக்கான அரசியலமைப்பு வாக்குறுதி ஆகியவற்றைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி முன்னின்று வழி நடத்த வேண்டும்’’ என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீது பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வெறுப்பு உண்டு. அதனால், அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவியாக மாற்ற ​பிரதமர் ​மோடி விரும்புகிறார். அவை: 1. வரவு செலவுத் திட்டங்கள், செயல் திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் கட்டளையிடப்படும். 2. திட்டத்துக்கான செலவுகளில் 40% மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும். 3. நிதி தீர்ந்துவிட்டால் அல்லது அறுவடை காலங்களில் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.

இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் லட்சியங்களுக்கு நேரடியான அவமதிப்பாகும். பெரிய அளவிலான வேலையின்மை மூலம் இந்தியாவில் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த பிறகு, மோடி அரசாங்கம் இப்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது’ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​தின் பெயரை ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என மாற்றும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) [Viksit Bharat — Guarantee For Rozgar And Ajeevika Mission (Gramin)] அதாவது VB-G RAM G என இந்த மசோதாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT