புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000-க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை 2025-26-ம் நிதியாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 75% சரிந்து ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதற்கு முந்தைய 12 நிதியாண்டுகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த 2015-16-ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை முந்தைய ஆண்டின் ரூ.141.46 கோடியிலிருந்து சுமார் 86% சரிந்தது. தற்போதைய சரிவுக்கு முன்னதாக, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நன்கொடை வசூல் அதிகரித்திருந்தது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.281.48 கோடியாக இருந்த நன்கொடை வசூல், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024-25ம் நிதியாண்டில் ரூ.517.39 கோடியாக உயர்ந்தது.
2024-25-ம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.20,000 -க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் ரூ.6,074.02 கோடி கிடைத்தது. இது காங்கிரஸைவிட 12 மடங்கு அதிகம்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பாஜகவின் நன்கொடை விவரங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. ஆய்வு செய்யப்பட்ட 12 நிதியாண்டுகளிலும் பாஜகவின் நன்கொடை வசூல் காங்கிரஸைவிட அதிகமாகவே இருந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நன்கொடை வருவாய் சரிவுக்கு புரூடன்ட் தேர்தல் அறக்கட்டளை மூலம் கிடைத்த நிதி கணிசமாகக் குறைந்ததும் முக்கிய காரணமாகும். இந்த அறக்கட்டளை 2024-25ம் நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.216.34 கோடி வழங்கியிருந்தது. ஆனால், 2025-26-ம் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.25 கோடியாகக் குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நன்கொடை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரே தேர்தல் அறக்கட்டளை புரூடன்ட் மட்டுமே. மற்ற முக்கிய நன்கொடையாளர்களில் ஸ்டார் சிமென்ட் நிறுவனம் ரூ.5 கோடியும், சஜ்ஜன் பஜாஜ்கா ரூ.4 கோடியும், பிரேம் குமார் பஜாஜ்கா ரூ.2 கோடியும் வழங்கியுள்ளனர் என, இந்திய தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் அறிக்கை தாக்கல் செய்துள்்ளது.