ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நாளை (12-ம் தேதி) முதல் வரும் 14- ம் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் 2-வது பாரத் மாநாடு நடைபெறுகிறது. இதில், 70 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், தெலங்கானா மாநில அரசு நடத்தும் இந்த பாரத் மாநாட்டில், உலக அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள், உலகின் தெற்கு மற்றும் வடக்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஆம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக, சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் அறங்காவலர் குர்தீப் சப்பால் கூறும்போது, “உலகம் முழுவதுமுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், அரசியல் என்பது அரசியல்வாதிகளின் நலனுக்காக அல்லாமல், மக்களின் சேவைகளுக்காக இருக்க வேண்டுமென்பதற்கான உத்திகளை உருவாக்கவும் இந்த பாரத் மாநாடு ஒரு சிறந்த தளமாக அமையும்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறும்போது, “இந்தியா, உலகம் மீது ராகுல் காந்தி கொண்டுள்ள எதிர்கால கண்ணோட்டம், உலகளவில் உருவாகி வரும் புதிய பல பரிமாணங்களை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இதில், 12 சர்வதேச அம்சங்களும், தெலங்கானா தொடர்பான 8 அம்சங்களும் விவாதிக்கப்படும்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் தர்பாபு கூறும்போது, “சர்வதேச நிகழ்ச்சிகள் 4 முக்கிய கருப்பொருட்களின் அடிப்படையில் நடைபெறும். ஹைதராபாத்தை தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மையமாகவும், உலகப் பொருளாதார மையமாகவும் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை அலசுவது போன்ற கருத்து பரிமாற்றம் இந்த மாநாட்டில் நடைபெறும்” என்றார்.