இந்தியா

காட்டு யானைகள் இடமாற்றத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பேளூர், சக்லேஷ்பூர் ஆகிய இடங்களில் கடந்த வாரம் காட்டு யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், யானைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட காட்டு யானைகளைப் பிடிக்கும் பணியில் 7 கும்கி யானைகள், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடா, “ஹாசன் கிராமங்களில் சுற்றித் திரியும் 56 யானைகளை பிடித்து சிக்கமகளூருவில் உள்ள பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்கு அனுப்ப வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை கண்டித்து சிக்கமகளூருவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நயனா மோட்டம்மா, ராஜே கவுடா, தம்மையா ஆகிய 3 பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நயனா மோட்டம்மா கூறுகையில், “இதுகுறித்து வன அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு விரிவான‌ கடிதம் எழுதியுள்ளோம். எங்கள்கோரிக்கையை அரசு ஏற்காவிடில் எங்களது பதவியை ராஜினாமா செய்வோம்” என்றார்.இதையடுத்து, நேற்று மாலை எம்எல்ஏ நயனா மோட்டம்மா கர்நாடக பேரவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை என தெரிகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT