இந்தியா

பிரதமர் மோடி குறித்து காங். பிரமுகர் வெளியிட்ட ஏஐ வீடியோவால் சர்ச்சை!

அனலி

புதுடெல்லி: பிரதமர் மோடியை தேநீர் விற்பவர் போல் சித்தரித்து மலினமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராகினி நாயக் வெளியிட, அது தற்போது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தனது இளம் வயதில் தந்தைக்கு உதவியாக குஜராத் வாத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்ததாக தகவல்கள் உண்டு. அதை பிரதமரே பல மேடைகளில் கூறியிருக்கிறார். “மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக, தேசப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால்தான் நான் நாட்டின் பிரதமராக ஆனேன்.” என்று மோடி கூறியிருக்கிறார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் பல நேரங்களில் பிரதமரையும் தேநீர் விற்பனையையும் வைத்து பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த கேலிகளுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு சர்வதேச அரங்கில் சிவப்புக் கம்பள வரவேற்பு பின்னணியில் பிரதமர் மோடி தேநீர் விற்பது போல் வீடியோ ஒன்றை ஏஐ-யில் உருவாக்கி வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகினி நாயக் என்பவர்.

இவர் மருத்துவர் எனத் தெரிகிறது. காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் இவர், இவ்வாறாக தனிநபர் விமர்சனத்தை மிகவும் மலினமான சிந்தையோடு நாட்டின் பிரதமருக்கு எதிராக முன்னெடுத்துள்ளதற்கு அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.1-ம் தேதி தொடங்கியது. இரண்டு நாட்களா சார் - வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியது.

இதற்கிடையில் மத்திய அரசு செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை தயாரிக்கும்போதே கட்டமைக்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி அதுவும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விவகாரம் எனப் பல பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் சூழலில் இந்த ஏஐ வீடியோ காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக வந்து சேர்ந்துள்ளது.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். இந்தச் சூழலில் பிரதமரை மோசமாக சித்தரித்து காங்கிரஸ் பிரமுகர் ஏஐ வீடியோ வெளியிட்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT