இந்தியா

‘‘மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிட விரும்பவில்லை’’ - திக்விஜய் சிங் அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், 1993 முதல் 1998 வரையும் பின்னர் 1998 முதல் 2003 வரையும் இரண்டுமுறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்தவர். 2003 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.

அதன்பிறகு, 2013ல் தீவிர அரசியலுக்கு வந்த திக்விஜய் சிங், 2014ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம் 2000ல் முடிவடைந்தபோது, மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 12 ஆண்டுகாலமாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திக்விஜய் சிங்கின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், திக்விஜய் சிங்குக்கு கடிதம் எழுதிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூகப் பிரிவின் தலைவர் பிரதீப் அஹிர்வார், ‘‘மத்தியப் பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்வாக, நீங்கள் வழிவிட வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பட்டியல் சமூக மக்கள் 17% உள்ளனர். அவர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, இம்முறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இது சமூக சமநிலை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதோடு, தலித் சமூகத்தின் சுயமரியாதை மற்றும் அரசியல் பங்கேற்பையும் அது வலுப்படுத்தும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்துள்ள திக்விஜய் சிங், ‘‘மத்தியப் பிரதேசத்தில் இருந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இம்முறை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. ஆனால், நான் மீண்டும் மாநிலங்களவைக்குப் போட்டியிட விரும்பவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அமைப்பு முறையை திக்விஜய் சிங் பாராட்டி இருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் (நரேந்திர மோடி), மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்” என பதிவிட்டிருந்தார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘‘நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். அதேநேரத்தில், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் நான் பாராட்டியுள்ளேன். நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா?’’ என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT