பெங்களூரு: திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுமார் 30 ஆண்டுகள் காங்கிரஸ், திமுக கட்சிகள் இடையே கூட்டணி நீடித்தது. கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை திமுக ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் திடீரென வெளியேறி உள்ளது. அந்த கட்சி சந்தர்ப்பவாத கட்சி ஆகும்.
ஆட்சி- அதிகாரத்துக்காக அணி மாறும் கட்சி. தற்போது திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்தியிருக்கிறது. அந்த கட்சி ஒட்டுண்ணி போன்றது. ஏதாவது ஒரு கட்சியின் முதுகில் ஏறி பயணம் செய்யும். இறுதியில் அந்த கட்சியின் முதுகிலேயே காங்கிரஸ் குத்தும். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உட்கட்சி பூசலால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. உட்கட்சி பூசல் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் நல்லாட்சியால் பல மாநிலங்களில் தாமரை மலர்ந்து வருகிறது. மேற்குவங்கத்தில் முதல்முறையாக பாஜக அரசு பதவியேற்று உள்ளது. கேரளாவில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.
ஆந்திரா, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் கர்நாடகா, தெலங்கானாவில் பாஜக 2-வது இடத்தில் உள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி 400 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் அந்த கட்சியால் 100 தொகுதிகளைக்கூட தாண்ட முடியவில்லை. ஆனாலும் காங்கிரஸின் ஆணவம் குறையவில்லை. தங்களது தோல்விக்கு ஒட்டுமொத்த உலகத்தையும் அந்த கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் கைதேர்ந்து விளங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி விசி அந்த கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பெட்ரோல் சிக்கனம் அவசியம்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.9,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மேற்கு ஆசிய போரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.
சமையல் காஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குழாய் காஸ் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.