இந்தியா

சட்டப்பேரவைக்கு மதுபோதையில் வந்தாரா பகவந்த் மான்? - பரிசோதனை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஷாலினி

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது போதையில் இருந்ததாகவும், அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மது அருந்திவிட்டு சட்டப்பேரவைக்கு வந்ததாக காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்தில், "இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் போதையில் இருந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நாங்கள் (காங்கிரஸ்) அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம். மேலும், நாங்களே முன்வந்து அப்பரிசோதனையை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்தில், "முதலமைச்சரின் நடத்தையைச் சிரோமணி அகாலி தளம் வன்மையாகக் கண்டிக்கிறது; இந்நாளில் அவர் மது அருந்திய நிலையில் வந்திருக்கக் கூடாது. அவரை இன்றே ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களின் முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா உறுப்பினர் சுவாதி மாலிவால் தனது எக்ஸ் தளத்தில், "ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழும் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று மீண்டும் மது போதையில் வந்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT