புதுடெல்லி: மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, மேற்கு ஆசிய நாடுகளிலும் இந்தப் போர் பரவியது. இதனால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயுஇறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் சுமார் 90 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வர்த்தக ரீதியிலான எல்பிஜி விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த எரிவாயு வீட்டு உபயோகத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பின்னர் நிலைமை சற்று சீரானதும் 70 சதவீத விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சில துறைகளுக்கு 50 சதவீத கட்டுப்பாடுகள் நீடித்து வந்தன.
கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: தற்போது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், எல்பிஜி சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு அடுத்தடுத்து வரவிருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓட்டல் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, போருக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே 100% விநியோகம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த ‘பல்க் எல்பிஜி' விநியோகம், தற்போது 50 சதவீத அளவுக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் சப்ளை தொடங்கப்பட்டுள்ளது.
நெருக்கடி காலத்தில் எல்பிஜி உற்பத்தியைப் பெருக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோகெமிக்கல் உற்பத்திக்குத் தேவையான சி3 மற்றும் சி4 ஹைட்ரோகார்பன்களை எல்பிஜி தயாரிப்புக்கு அரசு திருப்பியது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பெட்ரோகெமிக்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தற்போது நிலைமை சீராகியுள்ளதால், தினசரி எல்பிஜி உற்பத்தி 40,000 டன்களுக்குக் குறையாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, மீதமுள்ள ஹைட்ரோகார்பன் ஒதுக்கீடு மீண்டும் பெட்ரோகெமிக்கல் துறைகளுக்குத் திருப்பி விடப்படும். புதிய விநியோக நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமுகமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சகச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.