சூலூரில் விமானியின் உடலுக்கு அஞ்சலி

 
இந்தியா

துபாய் சாகச‌ நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் ஆட்சியர் மரியாதை

இல.ராஜகோபால்

கோவை: கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச‌ நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் கோவை சூலூரில் உள்ள விமான சாகச படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரியாக சூலூர் வளாகத்தில் பணியாற்றி வருகிறார். ஆறு வயது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற குழுவினருடன் விமானி நமன்ஷ் சியாலும் சென்றார். துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் கடந்த நவம்பர் 21ஆம் தேதியன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை இயக்கிய நமன்ஷ் சியால், எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார்.

விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் பூத உடல் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சூலூரில் விமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அவரின் உடல் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

SCROLL FOR NEXT