ஒடிசா அருகே நடுக்கடலில் தத்தளித்த சரக்கு கப்பல்.
புதுடெல்லி: ஒடிசா அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்து மாலுமிகள் உட்பட 23 பேரை இந்திய கடலோர காவல் படை பத்திரமாக மீட்டது.
சீனாவை சேர்ந்த “சீ செயலிங் ஷிப்பிங் கோ லிமிடெட்” நிறுவனத்தின் சரக்கு கப்பல் கடந்த 19-ம் தேதி மலேசியாவின் பினாங்கில் இருந்து 9,000 மெட்ரிக் டன் பாமாயிலை ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டது. ‘எம்டி சீகல் 9’ என்ற பெயருடைய இந்த சரக்கு கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கப்பலின் இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. கப்பலின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியது. இதுதொடர்பாக சரக்கு கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது. உடனடியாக இந்திய கடலோர காவல் படையின் ஐசிஜிஎஸ் விஸ்வஸ்ட் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது.
அந்த படையின் சிறப்பு நிபுணர்கள், கப்பலில் ஏறி சேதமடைந்திருந்த 3 குழாய்களை சரி செய்தனர். இதன்மூலம் கடல் நீர் கப்பலில் புகுவது தடுக்கப்பட்டது. சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் உட்பட 23 பேரையும் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். பழுதடைந்த சரக்கு கப்பல், இழுவை கப்பல் மூலம் பாராதீப் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய கடலோர காவல்படையின் அதிவிரைவு நடவடிக்கையால் சரக்கு கப்பல் கடலில் மூழ்குவது தடுக்கப்பட்டு உள்ளது.