ஒருநாள் பயணமாக ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் விஜய் நேற்று விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து நதிநீர் இணைப்பு குறித்து பேசினார்.

 
இந்தியா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: நதிநீர் இணைப்பு பற்றி பேச்சு

என்.மகேஷ் குமார்

விஜயவாடா: கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதி நீர் இணைப்பு திட்​டம் குறித்து தமிழக முதல்​வர் ஜோசப் விஜய், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உடன் சுமார் ஒன்​றரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்​தி​னார்.

தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் நேற்று ஒரு நாள் பயண​மாக ஆந்​திர மாநிலம் சென்​றார். விஜய​வாடா விமான நிலை​யத்​தில் அவரை ஆந்​திர மாநில அமைச்​சர் நாராயணா வரவேற்​றார். முதல்​வர் விஜய்​யுடன் அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, என்​.ஆனந்த் ஆகியோர் சென்​றிருந்​தனர்.

பட்டு வேட்​டி, சட்​டை​யில் சென்​றிருந்த முதல்​வர் விஜய், விஜய​வாடா கனக துர்​க்கை​யம்​மனை தரிசித்​தார். அங்​கிருந்து உண்​ட​வல்​லி​யில் உள்ள ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் வீட்​டுக்கு சென்​றார். அங்கு சந்​திர​பாபு நாயுடு, தமிழக முதல்​வர் விஜய்க்கு சால்வை அணி​வித்து பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றார். பின்​னர், தெலுங்கு - கங்கை கால்​வாய் திட்​டம், கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதி நீர் இணைப்பு போன்ற விவ​காரங்கள் தொடர்பாக இரு மாநில முதல்​வர்​களும் சுமார் ஒன்​றரை மணி நேரம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அப்​போது, இந்த நதி​களை இணைப்​ப​தன் மூலம் ஆந்​திரா மட்​டுமல்​லாமல் தென் மாநிலங்​கள் அனைத்​தும் வளம் பெரும்.இதனால் மத்​திய அரசின் உதவி​யுடன் நாம் அனை​வரும் ஒன்​றுபட்டு இந்த திட்​டத்தை நிறைவேற்​று​வோம் என முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​யுள்​ளார்.

அதே சமயத்​தில் தெலுங்கு கங்கை குடிநீர் கால்​வாய் திட்​டம் மூலம் ஆந்​தி​ரா​வில் இருந்து சென்​னைக்கு குடிநீர் வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஆனால், ஒப்​பந்​தப்​படி நீரின் அளவு வழங்​கப்​படு​வ​தில்​லை. இந்த ஆண்டு இது​வரை 4.08 டிஎம்சி அளவு மட்​டுமே தண்​ணீர் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த அளவை அதி​கரி​க்க வேண்டும் என்று முதல்​வர் விஜய் கோரிக்கை வைத்​தார்.

அதன் பின்​னர், இரு மாநில முதல்​வர்​களும் ஒன்​றாக சேர்ந்து விஜய​வாடா பவுர்​ணமி படித்​துறை பகு​திக்கு சென்​றனர். அங்கு ஏற்​பாடு செய்​திருந்த ‘விஜய​வாடா உத்​சவ்​-2.0’ வில் கலந்து கொண்​டனர். அப்​போது அங்கு கூடி​யிருந்த ஏராள​மான மக்​கள் தமிழக முதல்​வர் விஜய்யை பார்த்து உற்​சாக​மாக கை அசைத்​தனர்.

கூட்​டத்​தில் ஒரு சிறுமி ‘விஜய் மாமா என்​னுடன் ஒரு செல்ஃபி’ என ஒரு அட்​டை​யில் எழுதி காண்​பித்​தார். அதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதல்​வர் விஜய், தனது கைகள் மூலம் சைகை​யில் இதயம் போன்று காண்​பித்​தார். இதையடுத்து ரசிகர்​கள் ஆரவாரம் செய்​தனர்.

அதன் பின்​னர், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அங்கு ஏற்​பாடு செய்​திருந்த மேடை​க்கு வந்து ‘பாரத் மாதாவுக்கு ஜே’ என பேச்சை தொடங்​கி​னார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்​வர் விஜய்க்கு நீங்​கள் தரும் உற்​சாகத்தை பார்த்து எனக்​கும் உற்​சாகம் வரு​கிறது.

மாநிலங்​கள் வேறு​வேறாக இருந்​தா​லும் மக்​களின் ரசிப்​புத்​தன்மை ஒன்​று​தான். தமிழகம், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா போன்ற அனைத்து தென் மாநிலங்​களும் வளமாக இருக்க வேண்​டும்.

பிரதமர் மோடி​யின் ஆதர​வுடன் கோதாவரி-கிருஷ்ணா-​கா​விரி நதி நீர் இணைப்பு நடந்தே தீரும். இது நடந்​தால்​தான் தென் மாநிலங்​கள் அனைத்​தும் வளர்ச்சி அடை​யும். நவராத்​திரி உற்​சவத்​துக்கு வருகை தந்த முதல்​வர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்​றி. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

தெலுங்​கில் பேசிய விஜய்: நவராத்​திரி விழா​வில் கலந்​து​கொண்ட தமிழக முதல்​வர் விஜய் தெலுங்​கில் பேசி​னார். அவர் பேசும்​போது, ‘அந்​தரிக்கி நமஸ்​காரம்’ ஆந்​தி​ரா​வில் உங்​கள் அனை​வரை​யும் சந்​தித்​தது மிக்க மகிழ்ச்​சியை அளிக்​கிறது. உங்​கள் அனை​வருக்​கும் நவராத்​திரி பண்​டிகை வாழ்த்​துக்​கள். கோதாவரி-கிருஷ்ணா-​கா​விரி நதி நீர் இணைப்பு குறித்து முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுடன் பேச்சு வார்த்தை நடத்​தி​யது எனக்கு மிகுந்த உற்​சாகம் அளிக்​கிறது” என்​றார்.

முதல்​வர் விஜ​யின் தெலுங்கு பேச்சை ஆந்​திர மாநில மக்​கள் உற்​சாகத்​துடன் வரவேற்​றனர்.அதன்​ பின்​னர்​, தமிழில்​ “என்​ நெஞ்​சில்​ குடி​யிருக்​கும்​ விஜய​வா​டா மக்​கள்​ அனை​வருக்​கும்​ வணக்​கம்​. நன்​றி” என தனது பேச்​சை முதல்வர் விஜய் நிறைவு செய்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT