இந்தியா

36 மணி நேரத்துக்குள் சிலிண்டர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவு

செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திராவில் 14 ஆயிரம் டன் காஸ் இருப்பில் உள்ளது. இதனால் 15 நாட்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆதலால் பதிவு செய்த 36 மணி நேரத்துக்குள் சமையல் காஸ் சிலிண்டர் வீடு போய் சேர வேண்டும். கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் காஸ் விநியோகம் குறித்து அதிகாரிகள், முக்கிய விநியோக தாரர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் தற்போது சமையல் காஸ் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை. 14 ஆயிரம் டன் காஸ் இருப்பில் உள்ளது. இது 15 நாட்களுக்கு போதுமானதாகும். விரைவில் போதிய காஸ் ஆந்திராவிற்கு வர உள்ளது. ஆதலால் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

          

ஆனால், சில இடங்களில் சமையல் காஸ் சிலிண்டர்கள் கள்ள சந்தையில் விற்பதாக பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டு வந்துள்ளது. அப்படி யாராவது கள்ள சந்தையில் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்கள் பதிவு செய்த 36 மணி நேரத்துக்குள் காஸ் சிலிண்டர் அவர்களின் வீடு தேடி சென்று சேர வேண்டும். மாநிலத்தில் இண்டக்‌ஷன் ஸ்டவ் உபயோகம் அதிகரிக்கும்படி செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் காஸ் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.

SCROLL FOR NEXT