பெங்களூரு: கர்நாடகாவில் கோயிலில் புகைப்படக் கலைஞர்கள் காலணி அணிந்து திருமணத்துக்காகப் புகைப்படம் எடுத்ததால் 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 7 பேரையும் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் சக்லேஷ்பூரில் பெட்டத பைரேஸ்வரா கோயில் உள்ளது. அங்கு நேற்று புகைப்படக் கலைஞர்கள் நவி (27), நந்தன் (25) ஆகியோர் புதுமணத் தம்பதியினரைப் புகைப்படம் எடுப்பதற்காக வந்தனர். அப்போது நவியும், நந்தனும் காலணி அணிந்து புகைப்படம் எடுத்ததால் பக்தர்கள் கோபமடைந்தனர்.
இருவரையும் கோயிலுக்கு வெளியே காலணிகளைக் கழற்றி விட்டு வருமாறு கூறியுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த உள்ளூர் இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நவி, நந்தனை கடுமையாக தாக்கினர். மேலும் அவர்களின் கேமராக்களைப் பறித்து கீழே போட்டு உடைத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் காயமடைந்த புகைப்படக் கலைஞர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் அளித்த புகாரின் பேரில் 7 பேரை கைது செய்தனர்.