அபிஜித் தீப்கே
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்துப் போராடி வரும் மாணவர்கள், குறிப்பாக போராட்டத் தலைவர் தேவேந்திர மஹ்தோ மீது போலீஸ் நடத்திய தடியடிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தேவேந்திர மஹ்தோ கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னர் போலீஸார் தன் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், அதனால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறினார்.
ஜந்தர் மந்தராக இருந்தால் என்ன? ஜார்க்கண்டாக இருந்தால் என்ன? மாணவர்கள் மீதான இத்தகைய போலீஸ் வன்முறை கொடூரமானது. மனிதத் தன்மையற்றது.
இந்தச் சூழலில் சிஜேபி முழுக்க முழுக்க தேவேந்திராவுக்கு ஆதரவு தருகிறது. அவருடைய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர் நிச்சயமாக ஒரு ஹீரோ. அவருடைய துணிச்சலை, வலிமையை வணங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில அரசுத் துறை தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேலைவாய்ப்புக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (திங்கள்கிழமை) அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றபோது, அவர்கள் மீது காவல் துறை தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் மூலமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தியது.
அப்போது தேவேந்திரநாத் மஹ்தோ, “எங்களைத் தடுத்து நிறுத்த பல கட்டங்களிலும் முயற்சிகள் நடந்தன. கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர். தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தோம். ஆனாலும் கூட நாங்கள் அரசுக்கு எதிராக கோஷமிடவில்லை. ஒரே ஒரு அவதூறான, தவறான வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. அரசியல் பேசவில்லை. எங்கள் கைகளில் தேசியக் கொடி ம்ட்டுமே இருந்தது.
எங்கள் கோரிக்கைகள் எல்லாம் தேர்வு முறைகேடுகளைக் கலைய வேண்டும் என்பதே. அது பற்றி விசாரிப்பதாகச் சொல்கின்றனர். நேபாளத்தில் இருந்துகொண்டு இங்கு நடக்கும் தேர்வில் பங்கேற்றதாகக் கணக்கு காண்பிக்கப்படுகிறது. அப்படியிருக்க இந்த விசாரணைகள் மீது என்ன நம்பிக்கை எங்களுக்கு வரும்?
என்னுடைய உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. சர்க்கரை அளவு 5.3 ஆக குறைந்துள்ளது. எனது உடல்நிலை என் கைமீறிச் செல்கிறது. நான் உயிர் துறந்தாலும்கூட அதை அரசு கண்டுகொள்ளாது போல. 1926-ல் பகத் சிங் உயிர்த்தியாகம் செய்தார். 2026-ல் நாங்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.