புதுடெல்லி: கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகி சவுரவ் தாஸ், மத்திய அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
நீட் வினாத்தாள் மோசடி தொடர்பாக சிஜேபி கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தியது. கடந்த மாதம் 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சிஜேபியினர் செல்ல முயன்றனர்.
அப்போது போலீஸார் மீது சிஜேபியினர் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சவுரவ்தாஸ் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக போராட்டத்தில் பங்கேற்ற ருசிகா சிங் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்குகிறது.
மக்களவை எம்.பி.க்களில் 50 சதவீதத்தினர் மீதும், பாஜகவைச் சேர்ந்த சுமார் 100 எம்.பி.க்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. தைரியம் இருந்தால் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது மத்திய அரசு முதலில் நடவடிக்கை எடுக்கட்டும்’’ என்றார்.